மனம் இசைந்து பாடுவோம்
---------------------------
"பெத்தலையில் பிறந்தவரை போற்றித் துதி மனமே..." கீர்த்தனை. 31
அன்புக்குரியவர்களே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய திருப்பெயரில் மீண்டும் உங்களுக்கு அன்பின் தோத்திரங்கள். கிறிஸ்மஸ் திரு நாட்கள் நெருங்கிக் கொண்டிருப்பதினால், இந்த மாதம் "பெத்தலையில் பிறந்தவரை போற்றித் துதி மனமே..." என்ற கீர்த்தனை பாடலில் உள்ள இறையியலை நாம் அறிந்து கொள்வோம், அறிந்து
பண்னோடு பாடுவோம்... பண்போடு வளருவோம்...
பக்தி நெறியில் வாழ்வோம்...
இந்தப் பாடலை எழுதியவர் பெரும் மதிப்பிற்குரிய "ஜான் பால்மர்," கன்னியாகுமரி, மயிலாடி பகுதியை சார்ந்த உன்னதமான திருப்பணியாளர். 1812 முதல் 1883 வாழ்ந்து ஆண்டவருக்கு என்று திருப்பணி செய்தவர்.
கிறிஸ்துமஸ் திருநாட்களில் எத்தனையோ பாடல்கள் வந்தாலும், இன்றைக்கும் திருச்சபையை உயிரோட்டமாக வைத்திருக்கின்ற பாடல் இந்த பாடல் தான்.
கீதபவனியில் மனனமாக அனைவரும் சேர்ந்து பாடி கொண்டாடப்படும் பாடல்களில் முதன்மையானது இதுதான். குளிரும் பனியும் கொட்டிடவே என்ற இணைப்பு பின்னாளில் சேர்க்கப்பட்டது என்பதை நாம் நன்கு அறிவோம்.
"ஆராரோ ஆரிராரோ ..., தூங்கு தூங்கு பாலா நீ தூங்கு.." என்று பாடும் பொழுது, ஏதோ நம் வீட்டு குழந்தையை தாலாட்டி தூங்க வைப்பது போன்ற உணர்வு இந்த பாடலில் மேலோங்கி இருப்பது இந்த பாடலுக்குரிய சிறப்புகளில் ஒன்று.
ஆண் - பெண், வாலிபர் - குழந்தை, பெரியவர் - சிறியவர் என்ற வயது வித்தியாசம் இன்றி நம்மை தாலாட்டு பாட வைக்கும் ஆற்றல் இந்தப் பாட்டுக்கு உண்டு. கிராமம் - நகரம் என்ற பாகுபாடுகளை கலைந்து அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி இந்த பாடலுக்கே உரியது.
பாடலில் வெளிப்படும் இறையியல்.
------------------------
தாயின் மடி என்பது சொர்க்கம் தான். இந்த உலகத்தை எல்லாம் படைத்த கடவுளின் மைந்தன் "தாயின் மடியில் அழகாக படுத்து உறங்குகின்றார்" என்ற வர்ணனை மிகவும் சிறப்பான ஒன்று.
பிறக்கின்ற குழந்தை ஒவ்வொன்றும் அழுவது அதன் ஆரோக்கியத்தை வெளிப்படுத்துகின்ற செயலாகும். குழந்தை பிறப்பின் போது அழாமல் இருக்கின்ற குழந்தையை தட்டி அழவைப்பதை நாம் அறிந்திருக்கின்றோம். இயேசு கிறிஸ்து "அழுது பிறந்தார்" என்று அவரின் பிறப்பின் மகத்துவத்தை மிகவும் அழகாக பாடல் ஆசிரியர் எடுத்துக் காட்டி இருக்கின்றார்.
இந்தப் பாடலில் பல இறையியல் கருத்துக்கள் வெளிப்பட்டிருந்தாலும், நாம் கவனிக்க வேண்டிய ஒன்று "இன்னும்" என்கின்ற வார்த்தை.
"இன்னும்" என்ற சொல்லாடல் நம் வழக்கில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்ற ஒன்று. குழந்தைக்கு தாய் சோறு ஊட்டும் பொழுது "இன்னும்" கொஞ்சம் சாப்பிடுப்பா என்று கொஞ்சுவதை பார்த்திருக்கின்றோம் நாமும் அதை செய்திருக்கின்றோம்.
விருந்தினர்களுக்கு உணவு கொடுக்கும் பொழுது "இன்னும்" கொஞ்சம் சாப்பாடு வைக்கட்டுமா? அது விருந்தோம்பலின் உச்சகட்ட அன்பை வெளிப்படுத்துவதாக அமைகிறது.
உறவுகள் வீட்டுக்கு வந்து திரும்பிச் செல்லும் பொழுது "இன்னும்" கொஞ்ச நாள் இருந்துட்டு போனா நலமா இருக்கு என்று சொல்வதை நாமும் கடந்து வந்திருக்கின்றோம்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நபரிடம், மருத்துவர் "இன்னும்" கொஞ்ச நாளில் நீங்கள் வீட்டுக்கு போகலாம் என்பதையும் நாமும் காதார கேட்டிருக்கின்றோம்.
காதலர்கள் தங்கள் சந்திக்கின்ற குறுகிய நேரத்தில் "இன்னும்" கொஞ்சம் நேரம் கூட இருக்கக் கூடாதா என்ற ஏக்கத்தையும் அந்த வார்த்தை பிரதிபலிக்கின்ற ஒன்றாக இருக்கிறது.
காலை வேளையில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரையும் எழுப்பும் பொழுது, நாம் அனைவரும் சொல்லுகின்ற வார்த்தை "இன்னும்" கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன் ப்ளீஸ் என்று கெஞ்சுவது, வாழ்வில் வாடிக்கையான ஒன்றாகவே அமைந்திருக்கிறது என்பதை நாம் அறிகிறோம்.
அப்படிப்பட்ட "இன்னும்" என்ற வழக்குச் சொல்லை எடுத்து, பெத்தலையில் பிறந்தவரை போற்றித் துதி மனமே - இன்னும் என்ற பாடலில் இணைத்து, வாழ்வின் எதார்த்தங்களை கிறிஸ்து பிறப்போடு இணைத்து சொல்லியிருப்பது மிக சிறப்பு கூறிய ஒன்று.
# இதுவரையிலும் நாம் கடவுளை போற்றி துதித்தது பத்தாது "இன்னும்" போற்றி துதிக்க வேண்டும்...
# நமக்காக விண்ணை விட்டு பெத்தலையில் பிறந்து மரியின் மடியில் தவழ்கின்ற ஆண்டவர் இயேசுவை "இன்னும்" சொந்தம் கொண்டாட வேண்டும்...
# கடவுளின் மகனாக அரியாசனத்தில் அமர்ந்திருக்க வேண்டியவர், எல்லாவற்றையும் துறந்து பசுந்தொட்டிலில் படுத்திருக்கிறாரே, இந்த அன்பின் உருவை இன்னும் உறவாக்கிக் கொள்ள வேண்டும்...
# சொன்ன வார்த்தையை காற்றில் பறக்க விட்டு செல்பவர் அல்ல, தீர்க்கதரிசனங்களில் உரைத்ததை செய்து நிறைவேற்றுவதற்காகவே பிறந்து வந்த இயேசுவை "இன்னும்" போற்றி துதிக்க வேண்டும்...
# தொழுவத்தில் குட்டிகளை கத்தி அழைக்கும் சத்தம் கேட்டு அழுது பிறந்த இயேசுவை "இன்னும்" போற்றித் துதித்து கொண்டாட வேண்டும்...
# இவ்வளவாய் அன்பு வைத்த நம் பெருமானை நாம் எண்ணமுடன் போய் துதிக்க ஏகிடுவோமே "இன்னும்" ... என்று அனைவரையும் இந்த பாடல் வழியாக நம்மை அழைத்துச் செல்கிறார் பெத்தலைக்கு....
கிறிஸ்து பிறப்பை ஒரே ஒரு நாளில் மட்டும் கொண்டாடி மறந்து விடுவது நம் பண்பல்ல...
ஒவ்வொரு நாளும் அவர்
நமக்காக பிறந்திருக்கின்றார்...
நமக்குள்ளாக பிறக்கின்றார்....
நமக்குள்ளாக வாழ்கின்றார்....
நம் மீது அன்பு வைக்கின்றார்...
என்பதை எண்ணி எண்ணி...
"இன்னும்" ஆண்டவரை துதிக்க....
"இன்னும்"ஆண்டவரில் நெருங்கி வளர...
"இன்னும்" ஆண்டவர் வழியில் பயணிக்க...
"இன்னும்" ஆண்டவருக்காக வாழ...
"இன்னும்" ஆண்டவரைப் போல வாழ...
"இன்னும்" ....
ஒரு அடி எடுத்து வைப்போம்...
கிறிஸ்து பிறப்பை "இன்னும்" அதிகமாக ஏழை எளியவரோடு இணைந்து கொண்டாடுவோம். ஏழ்மையில் வாடுகின்ற மக்களில் இயேசுவை காணுவோம். இயேசு பிறந்த நோக்கத்தை அறிந்தவர்களாக ..., அன்பை கொண்டாடுவோம்.
உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
உங்கள் ஆயர்
அகஸ்டி ஞான காந்தி
அரியலூர் சேகர

Comments
Post a Comment